இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு ஜாதகருக்கு கொடுப்பினையிலும், தசாபுக்தியிலும், கோட்சாரத்திலும் கிரகங்கள் சாதகமான பலன்களைத் தருவதாக அமைந்தாலும், முகூர்த்தங்களை ஆளும் உபகிரகங்களால் சில தொல்லைகள் ஏற்படும். உதாரணத்திற்கு, ஒருவரின் திருமணத்திற்கு சாதகமான கிரக அமைப்புகள் இருக்கும்போது, உபகிரகங்களால் திருமணத்தைத் தடுக்க முடியாது என்றாலும், அந்தத் திருமண நிகழ்வின் முடிவில், உறவினருக்குள் மனக் கசப்பை உண்டாக்கி மகிழ்ச்சியைக் குறைத்துவிடும். முகூர்த்த லக்னத்திற்கு நான்காம் பாவத்தில் குளிகன் அமைந்தால், இதுபோன்ற திருப்தியற்ற சூழ்நிலை உருவாகும். உச்சாடனம், ஸ்தம்பனம், பேதனம் முதலான அஷ்டகர்மம் செய்பவர்கள், உபகிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட காலத்தைக்கொண்டே மந்திரப் பிரயோகம் செய்வார்கள். அஷ்டகர்மம் செய்யும்போது எழும் பிரச்ன லக்னத்தில் தூமன்
அமைய மாரணத்திற்கும், இந்திரதனுஷ் அமைந்தால் வசியத்திற்கும் ஏற்றவையாம். காலன், பரிவேடன், தூமன், அர்த்தபிரகணன், எமகண்டகன், இந்திரதனுஷ், குளிகன், வியதீபாதன், உபகேது ஆகிய ஒன்பது உபகிரகங்களின் காலபலத்தை "கந்தர்வ நாடி' விளக்குகிறது.
""அருட்கடலே! உயிர்களுக்கு உடலை சிருஷ்டிக்காமலிருந்தாலும், அந்த உயிர், உடலுடன் பூவுலகிற்குச் செல்லாமலிமிருந்தாலும் மாயை எனும் வலையில் விழாமல் இருக்கும். இதையறிந்தும் தாங்கள் உயிர்களை ஜனன, மரண சக்கரத்தில் சுழற்றுவதன் காரணத்தை அறிய விழைகிறேன்'' என அன்னை சத்குணாம்பாள், திருவேட்களம் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு பசுபதீஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
பாசுபதேஸ்வரர் உரைத்தது- ""சுடுதலும், குளிர்தலும் உயிர்க்கில்லை. உடலால் மட்டுமே உயிர் உலக அனுபவங்களைப் பெறமுடியும். கனியை உண்ணும்போது அதன் தோல் அகற்றப்படுமென் றாலும், பழுக்கும்வரை தோல் அவசியமாகிறது. ஸ்தூல சரீரமின்றி, காரண சரீரம் இயங்க முடியாது. பாவம், புண்ணியம் எனும் இரண்டும் அனுபவம் என்ற தாயின் இரட்டைக் குழந்தைகள். கப்பல் கரையில் பாதுகாப்பாக இருக்குமென்றாலும், எப்போதும் கரையில் இருப்பதற்காக கப்பல் கட்டப்படுவதில்லை. உயிர்கள் உடலுடன் பூவுலகம் சென்றால் மட்டுமே, அனுபவமாகிய மெய்ஞ்ஞானத்தை சுவைக்க முடியும். துளையிடப்படாத மூங்கில் இசைப்பதில்லை. சுடப்படாத பொன் ஒளிர்வதில்லை. அனுபவமே பிரும்மம்.
அனுபவமே சிருஷ்டியின் அடிப்படை.''
""திரிகால ஞானியே! "மத்தல்லி "எனும் தாண்டவத்தின் லயமாகிய புனர்பூசம் நட்சத் திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், ஆயில்யம் முதல் பாதத்தில் செவ்வாயும், பூரம் முதல் பாதத்தில் புதனும், ஹஸ்தம் முதல் பாதத்தில் சூரியனும், ஹஸ்தம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், அனுஷம் முதல் பாதத்தில் குருவும், பூராடம் இரண்டாம் பாதத்தில் சனியும், அவிட்டம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் விரிவாக விளக்கவேண்டும்'' என்று "திருமுதுகுன்றம்' திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவிருத்தகிரீஸ் வரரை அன்னை விருத்தாம் பிகை வினவினாள்.
பழமலைநாதர் உரைத் தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் சோமன் எனும் பெயருடன் குறும்பர் குலத்தில் வாழ்ந்தான். முரட்டுத்தனத்துடன், அறிவின் முதிர்ச்சியின்றி, தன் மூதாதையர் விட்டுச்சென்ற நிலத்தில் விவசாயம் செய்து ஜீவித்தான். அப்போது, அந்த ஊரில் வாழ்ந்த இடையர் குலத்துப் பெண்ணாகிய பொன்னி என்பவள் வளர்த்துவந்த பசு சோமனின் வயலில் மேய்ந்து பயிர்களை நாசம் செய்தது. இதனால் கோபமுற்ற சோமன், பொது இடத்தில் பொன்னியின் ஆடையைக் களைந்து அவமா னப்படுத்தினான். தன்மானமிழந்த அந்தப் பெண்மணி தன்னுயிர் நீத்தாள். சிலகாலம் கழித்து, சோமன் மரணத்திற்கு விருந்தாகி நரகம் சென்றான். நெடுங்காலம் அங்கு துன்புற்றபின், பாவமூட்டையைச் சுமந்து பூவுலகத்தையடைந்து, பாண்டு ரோகத்தால் உடல் வெளிர்த்து அவதியுறுகிறான். முற்பிறவி யில் கற்புடை மாதரின் உடலை வெளிக் காட்டியதால், தன்னுடலை இப்பிறவியல் வெளியில் காட்ட வெட்கப்பட்டு, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறான். கற்பெனும் பெருந்தீயில் வெந்தவனுக்குப் பரிகாரம் கிடையாது.''
(வளரும்)
செல்: 63819 58636
_____________
நாடி ரகசியம்
1. சதயம் மூன்றாம் பாதத்தில் சூரியன், செவ்வாய், சனி கூடியிருந்து, லக்னம் மிருகசீரிட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருந்தால் தூரதேசத்தில் மரணமுண்டாகும்.
2. சதயம் மூன்றாம் பாதத்தில் புதனும் சனியும் கூடியிருந்து, லக்னம் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருந்தால், அரசு உத்தியோகத்தில் அதிகாரமான பதவியிலிருப்பார்.
3. சதயம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் கூடியிருந்து, லக்னம் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருந்தால், தொழிலில் அபரிமிதமான வெற்றி கிடைக்கும்.
கேள்வி: அபிஜித் என்ற நட்சத்திரம் பற்றிய விரிவான குறிப்புகள் ஜோதிட நூல்களில் காணப் படாதது ஏன்?
பதில்: இருபத்தெட்டு நட்சத்திரங்களில் இருபத்திரண்டாவதாகக் கணக்கிடப்படுவதே அபிஜித் நட்சத்திரம். இது வலிமைமிகுந்த, மந்திர சக்தி படைத்த நட்சத்திரம். இதை எவரும் தவறாகப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதாலேயே நம் முன்னோர்களால் மறைக்கப்பட்டுவிட்டது. உத்திராடமும், திருவோணமும் சேருமிடத்தில் இது அமைவதாக சில கருத்துகள் இருந்தாலும், மகர ராசியில் உத்திராடத்தின் இரண்டாம் பாதமே நவாம்சத்தில் வர்க்கோத்தமமாகிறது என்பதால், அதுவே அபிஜித்தாக அமைகிறது என்பதே உண்மை. மகாபாரதத்தில், அபிஜித் நீதிதேவனின் மகனாக வருணிக்கப்படுகிறான். இதை அகத்திய நட்சத்திரம் என்று கூறுவோரும் உண்டு. சூரியனின் நட்சத்திரம், சனியின் இரவு வீடு, செவ்வாய் உச்சமாகும் இடம் என்பதால், நீதி பரிபாலனம் செய்து நல்லவர்களைக் காப்பதும் தீயவரை ஒடுக்குவதுமே இதன் காரகத்துவம். பெரும் விபத்துகளும், அரசியல் தலைவர்களின் துர்மரணங்களும் அபிஜித்தால் சுட்டிக்காட்டப்படுகிறது. அபிஜித் முகூர்த்தம் மிகவும் விசேஷமானது. அபிஜித் லக்னத்திலும் ஒவ்வொரு மாதமும் சந்திரன் எட்டு மணி நேரம் சஞ்சரிக்கும் காலத்திலும் செய்யவேண்டிய பரிகார முறைகளையும், அதனால் கிடைக்கும் அபரிமிதமான பலன்களையும் "கந்தர்வ நாடி' விளக்குகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/sivan-t_2.jpg)